532. போலீஸ் உயரதிகாரிகள் 2 பேர் சஸ்பெண்ட் : மோதல் விவகாரத்தில் ஐகோர்ட் உத்தரவு
சென்னை : சென்னை ஐகோர்ட் வளாகத்தில் நடந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக, கூடுதல் கமிஷனர் விஸ்வநாதன், இணை கமிஷனர் ராமசுப்ரமணியை, "சஸ்பெண்ட்' செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. "கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட வக்கீல்களுக்கு உரிமையில்லை, உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும்' என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 19ம் தேதி சென்னையில் வக்கீல்கள், போலீசாரிடையே பெரும் மோதல் வெடித்தது. ஓய்வு பெற்ற நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையில், சுப்ரீம் கோர்ட் கமிட்டி அமைத்தது. சம்பவத்திற்கு வக்கீல்களும், போலீசாரும் காரணமென அவர் அறிக்கை தாக்கல் செய்தார். அறிக்கை பற்றி வக்கீல்கள் அதிருப்தி தெரிவித்தனர். இந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டே விசாரிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. ஏற்கனவே, நீதிபதிகள் முகோபாதயா, தனபாலன், சந்துரு அடங்கிய "பெஞ்ச்' இச்சம்பவம் குறித்த வழக்கை தானாக முன்வந்து விசாரித்திருந்தது. தாக்குதலுக்கு காரணமான போலீஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்யக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் சங்கங்கள் மனுக்கள் தாக்கல் செய்தன. இதை விசாரித்த ஐகோர்ட் தலைமை நீதிபதி கோகலே, நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா அடங்கிய, "முதல் பெஞ்ச்' போலீஸ் கருத்தை கேட்காமல், "சஸ்பெண்ட்' செய்ய உத்தரவிட முடியாது எனக் கூறியது. அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை நீதிபதிகள் முகோபாதயா, தனபாலன், சந்துரு அடங்கிய "பெஞ்ச்' நடத்தும் என உத்தரவிட்டது. சில நாட்களாக உடல் நலம் சரியில்லாமல் இருந்த நீதிபதி முகோபாதயா, நேற்று ஐகோர்ட்டுக்கு வந்தார்.
நீதிபதிகள் முகோபாதயா, தனபாலன், சந்துரு அடங்கிய "பெஞ்ச்' முன், நேற்று இந்த மனுக்கள் அனைத்தும் விசாரணைக்கு வந்தன. சீனியர் வக்கீல்கள் கிருஷ்ணமூர்த்தி, ராமானுஜன், சோமயாஜு, வக்கீல்கள் வைகை, பிரபாகரன், பால் கனகராஜ் உள்ளிட்டோர் ஆஜராகினர். அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் மாசிலாமணி, அரசு பிளீடர் ராஜா கலிபுல்லா ஆஜராகினர்.மனுக்கள் மீதான இடைக்கால உத்தரவை, "பெஞ்ச்' நேற்று மாலை பிறப்பித்தது.
உத்தரவில் கூறியிருப்பதாவது: குற்றம் சாட்டப்பட்ட சிலரை கைது செய்ய, ஐகோர்ட் வளாகத்துக்குள் யார் உத்தரவின்படி போலீசார் நுழைந்தனர். யார் உத்தரவின்படி தடியடி நடத்தப்பட்டது என்பதற்கு போலீஸ் கமிஷனர், அப்போதைய வடசென்னை இணை கமிஷனர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென கடந்த மாதம் 21ம் தேதி உத்தரவிட்டோம். போலீஸ் அதிகாரிகளின் பெயர், பதவி ஆகியவற்றை அறிக்கையில் குறிப்பிட வேண்டுமென உத்தரவிட்டிருந்தோம். அந்த அறிக்கையைப் பெற்ற பின், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக கோர்ட் அவமதிப்பு வழக்கு எடுப்பது பற்றி முடிவு செய்யப்படும் எனவும் தெரிவித்திருந்தோம். ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி தலைமையில் விசாரணை கமிட்டியை கடந்த மாதம் 26ம் தேதி சுப்ரீம் கோர்ட் நியமித்தது. அப்போது, தமிழக அரசு சார்பில், "ஐகோர்ட் அல்லது விசாரணை கமிஷனர் யாரை குறிப்பிட்டாலும், அதை நாங்கள் முழுமையாக நிறைவேற்றுவோம்' என தெரிவிக்கப் பட்டது. ஐகோர்ட் உத்தரவிட்டும், சுப்ரீம் கோர்ட்டில் உத்தரவாதம் அளித்தும், இதுவரை தமிழக அரசு எந்த மனுவையும் தாக்கல் செய்யவில்லை. போலீஸ் கமிஷனர் அளித்த அறிக்கையை பிற்பகலில் அட்வகேட் ஜெனரல் தாக்கல் செய்தார். இன்று தாக்கல் செய்த போலீஸ் கமிஷனரின் மனுவில் தான், சிலரது பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால், அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பது பற்றி தெளிவாகக் குறிப்பிடவில்லை.
கடந்த மாதம் 26ம் தேதி சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பிக்கும் போது, "இது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம். கலவரம் போன்ற சூழ்நிலைகளைக் கட்டுப்படுத்த ஆயுதப்படை போலீசார் விரும்பினால், தற்காலிக தலைமை நீதிபதியின் அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும். ஐகோர்ட் வளாகத்துக்குள் நுழைவதற்கு முன், அந்த சூழ்நிலை பற்றி தற்காலிக தலைமை நீதிபதிக்கு தெரிவித்திருக்க வேண்டும்' எனக் கூறியுள்ளது. இவ்வாறு சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்தும், அதுபற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ஆரம்ப முகாந்திரம் உள்ளது. கூடுதல் போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன், வடசென்னை முன்னாள் இணை கமிஷனர் ராமசுப்ரமணியை சஸ்பெண்ட் செய்ய வேண்டும். இவர்களின் நேரடி மேற்பார்வையில் தான் அந்த செயல்கள் நடந்தன. போராட்டத்தில் ஈடுபட வக்கீல்களுக்கு உரிமையில்லை. உடனடியாக போராட்டத்தை வாபஸ் பெற்று, பணிக்கு திரும்ப வேண்டும். இவ்வாறு "பெஞ்ச்' உத்தரவிட்டது.
நன்றி: தினமலர்
ஒரு சந்தேகம்: இன்று ஏதோ (லாயர்களின்) வெற்றிப் பேரணியாமே, இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்துல ஒரு நாள் தொடரைக் கைப்பற்றியதற்காக இருக்குமோ ? இவர்களின் நாட்டுப்பற்று போற்றுதலுக்குரியது !
3 மறுமொழிகள்:
Test !
எது எப்படியிருந்தாலும் வக்கீல்களின் முட்டையடிப்பு சம்பவத்தை கண்டு கொண்டதாகத் தெரியவில்லையே. நீதிபதியின் முன்னாலேயே அவ்வாறு அராஜகச் செயல்களில் ரௌடித்தனமாக ஈடுபட்ட வக்கீல்களின் சன்னதை நிரந்தரமாக இல்லாவிடினும் தற்காலிகமாகவாவது பிடுங்க வேண்டாமா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
எனக்குப் புரியவில்லை. இனி எங்கு பிரச்சனை இருந்தாலும் போலீஸ் தடியடி நடத்தக் கூடாதா?
போலீஸ் நீதிமன்றத்திற்குள் நுழையக் கூடாது, சட்டக்கல்லூரிக்குள் நுழையக்கூடாது. வேறு எங்கு எல்லாம் நுழையக்கூடாது?
போலீஸ்காரர்கள் சஸ்பெண்ட், அப்போ கலவரம் பண்ணின வக்கீல்களுக்கு எல்லாம் ப்ரமோஷனா?
ரொம்பவே பாரபட்சமா இருக்கு. ரெண்டு தரப்பிலும் பிரச்சனை செய்தவர்களைத் தண்டிக்க வேண்டாமோ?
Post a Comment